தானியேல் முதலாம் அதிகாரம்

Written by

in

தானியேல் முதலாம் அதிகாரம் [பகுதி 2] – சகோ. டேவிட் ரைஸ்

தெய்வீக மனசாட்சியின் மதிப்பு

இந்த குறிப்பிடத்தக்க புத்தகத்தின் தொடக்க அதிகாரம் தானியேலும் அவனது மூன்று எபிரேய நண்பர்களும் சிறைபிடிக்கப்பட்டதை விவரிக்கிறது, இவர்கள் இஸ்ரவேலிலிருந்து பாபிலோனுக்கு ஒரே நேரத்தில் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பல வாலிபர்களில் நான்கு பேர் ஆவர்.

இந்த நான்கு இளம் எபிரேயர்களின் பெயர்கள் “தானியேல், அனனியா, மீஷாவேல், ஆசரியா” ஆகும், இவை அவர்களின் எபிரேயப் பெயர்கள் (தானி. 1:6). பாபிலோனியச் சிறைபிடிப்பாளர்களால் அவர்களுக்கு வேறு பெயர்கள் வழங்கப்பட்டன, அவையாவன: பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ (தானி. 1:7). அவர்கள் இளம் வயதிலேயே, அநேகமாக பதின்ம வயதுகளின் [teen age] மத்தியிலோ அல்லது முடிவிலோ சிறைபிடிக்கப்பட்டனர். அந்தக் காலத்தில் யோயாக்கீம், யூதாவின் ராஜாவாக இருந்தான், அவனது பதினொரு-ஆண்டுகால ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் இந்த சிறைபிடிப்பு நிகழ்ந்தது.

“யூதாவின் ராஜாவாகிய யோயாகீமின் ஆட்சியின் மூன்றாம் வருஷத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றுகை போட்டான்” (தானி. 1:1). நேபுகாத்நேச்சார் கைகளால் இஸ்ரவேலர்கள் பாபிலோனுக்குச் சிறைபிடிக்கப்பட்ட நான்கு சிறைபிடிப்புகளில் இது முதலாவதாகும். தானியேல் யோயாகீம் ராஜாவின் மூன்றாம் வருடத்தில் சிறைபிடிக்கப்பட்டான். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, யோயாக்கீனின் மூன்று-மாத ஆட்சியின் போது எசேக்கியேல் சிறைபிடிக்கப்பட்டான். [2 இராஜா. 24:8, 12-16; எசே. 1:1-2] யோயாக்கீமின் சகோதரனும், யூதாவின் கடைசி ராஜாவுமாகிய சிதேக்கியா, அவனது பதினொரு-ஆண்டுகால ஆட்சியின் முடிவில் சிறைபிடிக்கப்பட்டான். [2 இராஜா. 24:17-18, 25:6-7] இது நேபுகாத்நேச்சார் எருசலேமைச் சிறைபிடித்ததில்  “மூன்றாம் விசை” ஆகும் (எசே. 21:14). ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த நான்காவதும் மற்றும் கடைசியுமானச் சிறைபிடிப்பு, சிதேக்கியாவின் நாடு கடத்தலுக்குப் பின் எகிப்துக்கு ஓடிச் சென்ற யூதர்களைப் பற்றியது (எரேமியா 52:30, 43:7-11).

இந்தச் சிறைபிடிப்புகளின் தேதிகள் முறையே கி.மு. 605, கி.மு. 597, கி.மு. 587, மற்றும் கி.மு. 582 ஆகும். இந்தத் தெளிவான தேதிகளை [வருடங்களை] நாம் உறுதியாகக் குறிப்பிடலாம், ஏனென்றால் தேவன் வேதத்தின் பதிவில் இந்தச் சம்பவங்களை ராஜா நேபுகாத்நேச்சாரின் ஆட்சியுடன் உறுதியாக இணைத்து நமக்கு வழங்கியுள்ளார். நேபுகாத்நேச்சார், ஒரு பரந்த பேரரசின் – தானியேலின் தரிசனங்களில் வரும் சாம்ராஜ்யங்களின் வரிசையில் முதலாவது பேரரசின் – ராஜாவாக இருந்ததால் வரலாற்றில் உறுதியாகத் தேதியிடப்பட்டுள்ளது.

நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் தேதிகள் பல வழிகளில் நிறுவப்பட்டுள்ளன. மிக நேரடியான வழிகளில் ஒன்று, அவனது நீண்ட 43-ஆண்டு ஆட்சியின் போது பதிவு செய்யப்பட்ட சந்திர கிரகணங்களின் தொடராகும். “அவனது நீண்ட ஆட்சியின் 1, 12, 13, 14, 15, 30, 31, 32, 41 மற்றும் 42 ஆம் ஆண்டுகளில் சந்திர கிரகணங்கள் பற்றிய பதிவுகள் நம்மிடம் உள்ளன, இவை கி.மு. 604, 593, 592, 591, 590, 575, 574, 573, 564 மற்றும் 563 ஆம் தேதிகளுக்கு இந்த ஆண்டுகளை ஒதுக்குகின்றன.” *{*தி ஸ்ட்ரீம் ஆப் டைம், பக்கம் 87. இந்த வேலை மின்னணு அல்லது அச்சிடப்பட்ட வடிவத்தில் எங்களிடமிருந்து கோரிக்கையின் பேரில் கிடைக்கும். இந்தத் தகவலுக்கான ஆதாரம் புறஜாதி காலங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டது என்ற நூலின் சப்ளிமென்ட், பக்கம் 42, கார்ல் ஓலோஃப் ஜான்சன், ஓடியோன் புத்தகங்கள், ஆகஸ்ட் 1989.} பிற்கால ஆராய்ச்சி இரண்டு டசனுக்கும் அதிகமான அத்தகைய கிரகணங்களை அடையாளம் கண்டுள்ளது. **{**புறஜாதி காலங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டது, மூன்றாம் பதிப்பு, 1998, பக்கம் 182.} இவை ஒவ்வொன்றும் நேபுகாத்நேச்சாரின் ஆட்சியைத் தனித்தனியாகத் தேதியிடுகின்றன. இந்தக் கூற்றுகளின் ஒருங்கிணைந்த சாட்சியம் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

இவ்வாறு, தானியேலின் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனங்களின் காலத்தையும், அவனது விவரிப்புடன் பின்னிப்பிணைந்த இஸ்ரவேலின் வரலாற்றையும் நிறுவுவதற்கான வழிமுறைகளைத் தேவன் உறுதியாக வழங்கியுள்ளார். இது தெய்வீகப் பதிவின் நேர்மைக்கு அல்லது நம்பகத்தன்மைக்கு ஒரு மதிப்புமிக்க ஆதாரமாகும்; நாங்கள் எங்கள் முந்தைய இதழில் குறிப்பிட்டது போல தானியேலின் தீர்க்கதரிசனங்களைக் குறை கூற அல்லது எதிர்க்கக் காரணம் வைத்திருப்பவர்களால் விவாதிக்கப்படுகிறது.

அவனது சமகாலத்தவர்களிடையே பிரபலமானவர்

எசேக்கியேல் பாபிலோனுக்கு வந்த நேரத்திற்குள், தானியேல் தனது மனச்சாட்சிக்குக் காட்டிய பக்திக்காகவும் (முதலாவது அதிகாரம்), மற்றும் நேபுகாத்நேச்சாரின் கனவை விளக்கியதற்காகவும் (இரண்டாவது அதிகாரம்) ஏற்கெனவே புகழ்பெற்றிருந்தான், மேலும் இராஜ்யத்தில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டும் இருந்தான். எனவே, எசேக்கியேலின் புத்தகம் நமது வேதாகமத்தில் தானியேலின் புத்தகத்திற்கு முன் இடம் பெற்றிருந்தாலும், தானியேலைப் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எசேக்கியேலின் விவரிப்பை விட முன்னதாகவே தொடங்கின.

அவனது சிறைப்பிடிக்கப்பட்ட சக இஸ்ரவேலர்களால் தானியேல் மிகவும் உயர்வாக மதிக்கப்பட்டான். தேவன் கூட எசேக்கியேலிடம் பேசும்போது, “நோவா, தானியேல், யோபு” ஆகியோரின் விசுவாசத்தைக் குறித்துக் குறிப்பிட்டார், அவனை மிகச் சிறப்பானவர்களுடன் வைத்தார் (எசே. 14:14, 20).

மனசாட்சிக்கு ஒரு சோதனை

தானியேல் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனங்களைப் பெறுபவனாக, தேவனுடைய மிகுந்த தயவைப் பெற்றிருப்பான், இதன் மூலம் தானியேல் அவனது சமகாலத்தவர்களாலும், அவனது நாட்களிலிருந்து இன்று வரை யூதர்களாலும், இப்போது ஏறக்குறைய 2000 ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்களாலும், மேலும் ஆயிரம் வருட ஆட்சியின் போது ஒட்டுமொத்த உலகத்தாலும் மதிக்கப்படுவான். ஒரு புறஜாதி ராஜ்யத்தில் சிறைபிடிக்கப்பட்ட ஒரு வாலிபனுக்குக் கிடைத்த  இத்தகைய சலுகை அசாதாரணமானது. அவனது வாழ்க்கைப் பணிக்கு அவனைத் தயார்படுத்தும் விதமாக விசுவாசம், நற்பண்பு, மற்றும் தேவனுக்குக் காட்டும் பற்றுறுதி ஆகியவற்றிற்கு சில சோதனைகள் இருப்பது பொருத்தமானது, மேலும் அத்தகைய சோதனைகள் ஆரம்பத்திலேயே வந்தன.

தானியேலும் அவனது மூன்று நண்பர்களும் ராஜாவிற்குச் சேவை செய்வதற்காகப் பயிற்சியில் இருந்த புத்திசாலியான மற்றும் நம்பிக்கைக்குரிய இளைஞர்கள் ஆவர். எனவே, ராஜா அவர்களுக்காகச் சிறந்த உணவுகளை வழங்கினார்; அதில் “ராஜாவின் “போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.” [தானி. 1:5].

ஆனால் வெளிப்படையாகத் தெரிந்த இந்தச் சலுகை அந்த எபிரெய வாலிபர்களின் மனசாட்சிக்கு ஒரு பிரச்சினையைக் கொண்டிருந்தது, ஏனெனில் ராஜாவின் மேஜையிலிருந்து வந்த போஜனம் அநேகமாக பாபிலோனிய கடவுளுக்குப் படைக்கப்பட்டிருக்கலாம், மேலும் அது, பவுல் குறிப்பிடுவது போல, “விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவையாக” இருந்தது. [1 கொரி. 8:10; அப். 15:29] அத்தகைய போஜனத்தை உண்பது யூதர்களுக்கு அப்போதும், பவுலின் நாட்களிலும் வெறுக்கத்தக்கதாக இருந்தது. அது பொய்த் தெய்வங்களுக்கு ஒரு அளவிலான மரியாதையை அல்லது ஆதரவைக் குறிக்கும். இது யெகோவா மீதான அவர்களின் பக்திக்கு மாறாக இருந்தது. ராஜாவின் மேஜையிலிருந்து வரும் திராட்சரசமும் அநேகமாக அந்நிய தெய்வங்களுக்குப் பானபலியாகப் படைக்கப்பட்டிருக்கலாம். எனவே “தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்” (தானி. 1:8). இந்தத் தீர்மானத்தை அவனுடைய தோழர்களும் பகிர்ந்து கொண்டனர்.

தானாகவே, இந்தத் தீர்மானம் சுய மறுப்பைக் குறித்தது, ஏனெனில் ராஜாவின் சொந்த ஏற்பாட்டிலிருந்து வந்த அந்தத் தேர்வு செய்யப்பட்ட பதார்த்தங்கள் அன்றைய சுவைகளுக்கு மிகவும் மகிழ்ச்சியானவையாகவே இருந்திருக்க வேண்டும். மனசாட்சியுள்ள எல்லா ஆண்களும் பெண்களும், சுய மறுப்பின் மதிப்பை அங்கீகரிக்கிறார்கள், ஏனெனில் அது நம்முடைய இயற்கையான ஆசைகளைத் திருப்திப்படுத்துவதிலிருந்து நம்மை விலக்கி, நம்முடைய மனதையும் விருப்பங்களையும் ஆவியின் உயர்ந்த தரதிற்கு வழிநடத்துகிறது.

தானியேலின் வாழ்க்கையில் பிற்காலத்தில் ஏற்பட்ட  மற்றொரு சந்தர்ப்பத்தில், ஆவியின் ஒரு விஷயம் குறித்து அவன் குழப்பமடைந்து, அதற்கான விளக்கத்தை விரும்பியபோது, மீண்டும் ஒரு சுய மறுப்புக்கான நேரத்தைத் தேர்ந்தெடுத்தான். “அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரம் முழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை.” (தானி. 10:2, 3). தேவன் இந்த உத்தம மனப்பான்மைக்குப் பதிலளித்து, 11 மற்றும் 12-ஆம் அதிகாரங்களில் விவரிக்கப்பட்டுள்ள தரிசனத்தை அவருக்கு வழங்கும்படி தன் தூதனாகிய காபிரியேலை அனுப்பினார். [தானி. 11; 12]

(மைக்கேலேஞ்சலோவால் வரையப்பட்ட தீர்க்கதரிசி தானியேல்)

அப்போஸ்தலனாகிய பவுலும் அந்தியோகியாவிலிருந்த சகோதரர்களும் புறஜாதியாருக்குத் தங்கள் ஊழியத்தை முன்னெடுத்துச் செல்வதில் தேவனுடைய சித்தத்தைத் தேடியபோது, இத்தகைய விலக்குதலின் மதிப்பை வெளிப்படுத்தினார்கள். “அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.” (அப். 13:2, 3).

இயேசுவும் தம்முடைய ஞானஸ்நானத்திற்குப் பிறகு வனாந்தரத்திற்குச் கொண்டு செல்லப்பட்டபோது இதையே செய்தார். அங்கே அவர் நாற்பது நாட்கள் உபவாசித்து, வேதவாக்கியங்களையும், தம்முடைய ஊழியத்தை எவ்வாறு நடத்துவது என்பதையும் தியானித்தார். [மத். 4:1-2] மோசே சீனாய் மலையில் இரண்டு சந்தர்ப்பங்களில் நாற்பது நாட்கள் இருந்தபோது [யாத். 24:18; 34:28], மற்றும் எலியாவும் ஒருமுறை நாற்பது நாட்கள் உணவின்றி இருந்தபோது [1 இராஜா. 19:8] அற்புதமாகக் காப்பாற்றப்பட்டார்களோ, அதேபோல இயேசுவும் இந்தச் சூழ்நிலையில் அற்புதமாகப் பராமரிக்கப்பட்டார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தேவன் நம் விஷயத்தில் இத்தகைய அற்புதங்களைச் செய்வார் என்று நாம் நினைக்கக்கூடாது. ஆனால் ஆவிக்குரிய வழிகாட்டுதலைத் தேடும் போது மாம்ச இச்சைகளிலிருந்து விலகிச் செல்வதன் மூலம் இந்த உதாரணங்களின் ஆவியை நாம்  பின்பற்றலாம்.

தானியேல் தனது மனசாட்சியை எவ்வாறு தொடர்ந்தான்

ஒன்பதாம் வசனம் [தானி. 1:9] “தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்.” என்று கூறுகிறது. தானியேலின் சாந்தமான சுபாவம், மென்மையான குணம், மற்றும் அவனது எஜமானர்களின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்த விதம் ஆகியவை அவனை அவர்களுக்குப் பிரியமானவனாக மாற்றியது. அவன் ஒரு சுயநலவாதி இல்லை, அல்லது பெருமையும் அகந்தையும் உள்ளவன் அல்ல என்பதை அவர்களால் பார்க்க முடிந்தது. நமது எஜமானராகிய இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றினால், நம்முடன் இருப்பவர்களும் நம்மிடம் அதே குணங்களை பார்க்க முடிய வேண்டும். இயேசுவைப் பற்றியும், அவருடைய ஆரம்ப காலங்களைப் பற்றியும் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது: “இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.” (லூக்கா 2:52).

தானியேலின் குணம், அவன் மீது பொறுப்பிலிருந்தவர்களை அவனுக்கு உதவி செய்யத் தூண்டியது, குறிப்பாக தானியேல் பல சிறப்புக் கோரிக்கைகளைக் கேட்கவில்லை. ஆனால் விசாரிப்புக்காரனாக இருந்த மெல்சார், தானியேலும் அவனது நண்பர்களும் பலவீனமாகவும் மெலிந்தும் போவார்கள் என்றும், மேலும் அவர்களின் அந்த நிலைமை தன்மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் பயந்தான் [தானி. 1:10, 11].

எனவே தானியேல் ஒரு சோதனையை முன்வைத்தான். “பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,” (தானி. 1:12). அந்தப் பத்து நாட்களின் முடிவில், மெல்சார் அவர்களின் தோற்றத்தை மதிப்பிட்டு, அதற்கேற்ப முடிவெடுக்கலாம். “பயிர்வகைகள்” என்பது புரதமும் ஆற்றலும் நிறைந்த பருப்பு வகைகளை உள்ளடக்கிய ஒரு சைவ உணவாகும், மேலும் இது மிகவும் திருப்திகரமான விளைவுகளை ஏற்படுத்தியது, அதனால் “பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது.” (வசனம் 15) [தானி. 1:15]. இதனால் அவர்கள் தங்கள் விசேஷித்த உணவைக் காலவரையின்றித் தொடர அனுமதிக்கப்பட்டனர்.

இது இஸ்ரவேலர்களாகிய அவர்களுக்கு, மோசே மூலம் வெகுகாலத்திற்கு முன்பு இஸ்ரவேலுக்குக் கொடுக்கப்பட்ட உடன்படிக்கையின் கீழ் தேவனுடனான தங்கள் உறவைத் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருந்தது, இவ்விதமாக அவர்களுடைய ஆவியை ஊக்கப்படுத்தியது. தேவனுக்கு முன்பாகத் தகுதியான விதத்தில் நடந்துகொள்வதில் அவர்களுக்கு இருந்த அமைதியான உறுதி, அவர்கள் தங்கள் படிப்பிலும் பொறுப்புகளிலும் ஈடுபடும்போது அவர்களை அதிகமாய் விருத்தியடைய செய்தது என்பதில் சந்தேகமில்லை, இதன் விளைவாக, உரிய காலத்தில், நேபுகாத்நேச்சார் அவர்களுக்குப் பிற்காலத்தில் கொடுத்த உயர்வுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இருந்தனர்.

நமக்கும் அதுபோல்தான். நமது வாழ்க்கையில் தேவனுடைய கொள்கைகளுக்கு நாம் தினந்தோறும் கீழ்ப்படிந்து, மற்றவர்கள் அனுபவிக்கும் இயற்கையான இன்பங்களுடன் அவை ஒத்துப் போகாவிட்டாலும், வெளிச்சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் நம் மனதைச் சமாதானத்தைத் தருகின்ற தேவனுக்கு அருகாமையில் இருக்கிறோம் என்ற உணர்வை நமக்கு அளிக்கிறது. இது நமது பொறுப்புகளில் நம்மை ஈடுபடுத்தும் திறனை மேம்படுத்துகிறது, அது நமது ஆரம்ப கால பள்ளிப் படிப்பாக இருந்தாலும் சரி, அல்லது நமது பிற்காலங்களில் [கணவன்,] மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்திற்கான பொறுப்புகளாக இருந்தாலும் சரி. இது கர்த்தருடைய மக்களுக்காகவும், நமது கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்காகவும் நாம் செய்யும் ஊழிய அர்ப்பணிப்பையும் மேம்படுத்துகிறது.

கனமான நுகம் அல்ல

கிறிஸ்தவ வாழ்க்கை சுமைகள் இல்லாத ஒன்றல்ல. ஆனால் அவை கனமான சுமைகள் அல்ல, ஏனென்றால் நாம் நமது கடமைகளில் ஈடுபட்டால், அவை நம்மால் நிர்வகிக்க முடியும் என்று கிறிஸ்து காண்கிறார். நாம் கடினமான மர்மங்களைக் கண்டறியவோ [அல்லது புரிந்துகொள்ளவோ], அல்லது பெரிய செயல்களைச் சாதிக்கவோ தேவையில்லை, மாறாக, நாம் கொண்டிருக்கும் கடமைகளுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும், நீதியாய் நடக்க வேண்டும், மற்றவர்களிடம் தயவாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும், மேலும் “பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.” (கொலோ. 3:2).

இவ்வாறு இயேசு தம்மைப் பின்தொடர்ந்த திரளான ஜனங்களிடம் கூறினார்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள்மேல் எடுத்துக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவானதும், என் சுமை இலகுவானதுமாய் இருக்கிறது.” (மத். 11:28-30).

தானியேலின் மற்றொரு குணம்

தானியேல் தனது முடிவில் உறுதியாக இருந்தான், ஆனால் அவன் ஒரு பிடிவாதமான ஆவியைக் காட்டவில்லை. மெல்சார் தனது கவலைகளைச் சுட்டிக்காட்டியபோது, தானியேல் பிடிவாதமாக மறுக்கவோ அல்லது தனது கொள்கையையே ஒரு தற்காப்பாகக் கூறவோ இல்லை. பிடிவாதமாக இருக்காமல், கொள்கைக்கான நமது முடிவுகளில் உறுதியாக இருப்பது பொதுவாகச் சாத்தியமாகும். தானியேல் மற்றவர்களின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் தனது மனசாட்சிக்குக் கீழ்ப்படிவதற்கான ஒரு வழியை நாடினான். முடிந்தவரை நாமும் அவ்வாறே செய்ய வேண்டும்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெர்சிய வரலாற்றுக் காலப்பகுதியில், சரியான ஒன்றிற்காக நின்ற இரண்டு பெண்களுக்கு இடையிலான பெரிய முரண்பாடைக் காண்கிறோம், ஆனால் இருவரும் கையாண்ட முறைகளும், அவர்களுக்குக் கிடைத்த முடிவுகளும் முற்றிலும் வேறானவை. அந்த இருவரும் அகாஸ்வேருவின் ராணிகளான வஸ்தி மற்றும் எஸ்தர் ஆவர், வரலாறு பொதுவாக ‘செர்க்சஸ்’ (Xerxes) என்று அழைக்கும் ராஜாவிற்கு எபிரெய மொழியில் உள்ள பெயர் அகஸ்வேரு. வஸ்தி ராஜாவின் கட்டளையை மறுத்தாள், கவலைப்படுவதற்கு அவளுக்கு நல்ல காரணங்கள் இருந்திருக்கலாம். ராஜாவின் நோக்கம் அநேகமாக உன்னதமான பெண்களுக்கு இருக்கும் இயல்பான அடக்கத்திற்கு முரணாக இருந்திருக்கலாம் [எஸ்தர் 1:10-12]. அவள் தன் கவர்ச்சியை மேலும் நம்பி, ராஜாவின் அமைதியான தீர்ப்புக்கு ஞானமாகவும், ஒரு கனிவான ஆவியுடனும் முறையிட்டிருந்தால், அவள் அதிக வெற்றியடைந்திருக்கலாம். எஸ்தர் இன்னும் பெரிய கவலை கொண்ட ஒரு விஷயத்துடன் அதே ராஜாவை அணுகியபோது நிச்சயமாக வெற்றியடைந்தாள் [எஸ்தர் 1:12, 17]. 1 சாமு. 25:23, 24-இல் அபிகாயிலின் தாழ்மையான மனப்பான்மையையும் கவனியுங்கள். அவளுடைய ஞானமான நடத்தை ராஜாவாகிய தாவீதின் ஆவியைச் சாந்தப்படுத்தியது மற்றும் ஒரு பெரிய இழப்பைத் தடுத்தது [1 சாமு. 25:3, 10-11, 13, 21-24, 32-33, 39, 42].

மேலே உள்ள நமது வசனம் சொல்வது போல, இயேசு “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருந்தார் (மத். 11:29). கொரிந்துவிலுள்ள சகோதரர்களுக்கு ஆலோசனை வழங்கும்போது பவுல் இந்தக் குணங்களை வேண்டினார்: “உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும்,  தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” (2 கொரி. 10:1). கலா. 5:23-இல் அவர் நமக்கு நினைவூட்டுகிறார், “சாந்தம், இச்சையடக்கம்; இவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை”.

தானியேலின் இனிமையான உதாரணத்தை நாம் நினைவில் கொள்வோம், மேலும் இந்த ஆவியை மற்றவர்கள் நம்மில் காணட்டும். இதன் மூலம் தேவன் தாமே பிரியப்படுவார்.

சபையின் ஒரு சித்திரம் (A Picture of the Church)

முந்தைய இதழில் குறிப்பிட்டது போல, தானியேல் இப்போது இந்த சுவிசேஷ யுகத்தில் உருவாக்கப்பட்டு வரும் தெரிந்துகொள்ளப்பட்ட சபையின் ஒரு படமாக இருக்கிறார், இது இயேசுவின் காலத்திலிருந்து கிறிஸ்துவின் ஆயிரம் வருட இராஜ்யம் நிறுவப்படும் வரை நீடிக்கிறது. வேதாகம ஆதாரங்களின்படி நாம் புரிந்துகொண்டது போல, அந்த இராஜ்யம் இன்னும் 37 [இப்போது 18]  ஆண்டுகள் எதிர்காலத்தில் உள்ளது, ஏனென்றால் ஆதாமிலிருந்து 6000 ஆண்டுகள் கி.பி. 2043-க்குள் முடிவடையும் என்று தோன்றுகிறது.

சபை பல கடினமான அனுபவங்களைக் கடந்து வந்துள்ளது, ஆரம்பகாலக் கிறிஸ்தவர்களை யூதத் தலைவர்கள் துன்புறுத்தினர், அவர்களை அடித்தனர், சிறையிலடைத்தனர், ஸ்தேவானைப்போல சிலரைக் கல்லெறிந்து கொன்றனர் [அப்போஸ்தலர் அதிகாரம் 7], மற்றும் ஏரோது யூதர்களைப் பிரியப்படுத்த யாக்கோபைப் பட்டயத்தால் கொன்று, பேதுருவையும் ஏறக்குறைய அதுபோலவே செய்தார்கள் (அப்போஸ்தலர் அதிகாரம் 12).

புறஜாதி ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் தீவிரமடைந்தது, இது நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை ரோமுக்கு எதிராகக் கலகம் செய்ததாகக் குற்றம் சாட்டியபோது ஒரு பரந்த அளவில் தொடங்கியது. அவன் அவர்களில் பலரைக் கொழுந்துவிட்டு எரியும் எண்ணெயில் தோய்க்கப்பட்ட தோல்களில் சுற்றிக் கட்டி, தனது நடைபாதைகளில் வெளிச்சம் கொடுக்க தீயிட்டுக் கொளுத்தினான். நீரோ ஏற்கெனவே அப்போஸ்தலர்களான பவுல் மற்றும் பேதுருவை, ஆரம்பக்காலக் கிறிஸ்தவச் சாட்சியத்தின்படி, பட்டயத்தாலும் சிலுவையினாலும் கொன்றிருந்தான். அதன் பிறகு நீரோ விரைவிலேயே மரித்தான், இந்தச் நேரடித் துன்புறுத்தல் சிறிது காலத்திற்கு நின்றது. ஆனால் அது ரோமின் அதிகாரத்தைத் தங்கள் கருவியாகப் பயன்படுத்திய கிறிஸ்தவர்களின் எதிரிகளால் அவ்வப்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

10 ஆண்டுகால விசேஷித்த துன்புறுத்தல்

ஆனால் மிக மோசமான துன்புறுத்தல் உச்சக்கட்டத்தில் இருந்தது. இது டயக்லீஷியன் சக்கரவர்த்தியின் [Emperor Diocletian] ஆட்சியின் போது நடந்தது, அவர் கி.பி. 245 முதல் 313 வரை வாழ்ந்தார். இந்தப் காலத்தைப் பற்றிய ஒரு பகுதி இங்கே உள்ளது (www.reformation.org இலிருந்து).

“கி.பி. 303 ஆம் ஆண்டில் தொடங்கி, புறஜாதி ரோமப் பேரரசு கிறிஸ்தவத்தை ஒழிக்க ஒரு கடைசிப் பெரிய முயற்சியைச் செய்தது. டயக்லீஷியன் சக்கரவர்த்தியின் கீழ் நடந்த இந்தத் துன்புறுத்தல் கி.பி. 303 பிப்ரவரி 23-ஆம் தேதி அன்று தொடங்கியது, அது ரோமன் டெர்மினாலியா [Roman Terminalia] பண்டிகை கொண்டாடப்பட்ட நாள், மேலும் கொடூரமான புறஜாதியினர் இறுதியாக கிறிஸ்தவத்தை முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று பெருமை பேசினர். … அந்தக் காலத்தில் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை நிலத்திற்கு மேலே துன்புறுத்தலையும், நிலத்தடியில் ஜெபத்தையும் கொண்டிருந்தது. இது வரலாற்றில் இரத்தசாட்சிகளின் சகாப்தம் என்று அறியப்படுகிறது.

“புறஜாதியினரின் முக்கிய இலக்கு புதிய ஏற்பாடு … மற்றும் கிறிஸ்துவின் வரலாறுகள் ஆகும். புறஜாதி ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகங்களும் கூட அழிக்கப்பட்டன, ஏனெனில் அவை அப்போஸ்தல கால சபையின் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் பற்றி அநேக காரியங்களை வெளிப்படுத்தக்கூடும். அப்போது இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் இருந்தனர், அவர்களில் பலரிடம் புதிய ஏற்பாட்டின் பிரதிகள் இருந்தன. அந்தக் காலத்திலிருந்த சுமார் 5,000 கையெழுத்துப் பிரதிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன, மேலும் மிகப் பழமையானது கி.பி. 350 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. “மரணபரியந்தம் உண்மையுள்ளவர்களாய்” இருப்பதன் மூலம் (வெளி. 2:10) கிறிஸ்தவர்கள் ரோமப் பேரரசில் புறஜாதித்துவத்தை முறியடித்து வந்தனர்.

“கி.பி. 303 முதல் 313 வரை, கிறிஸ்தவர்களின் உடல்களும் புத்தகங்களும் இந்தக் கடைசிப் பெரிய புறஜாதி துன்புறுத்தலின் போது திட்டமிட்டு அழிக்கப்பட்டன. யூசிபியஸ் [Eusebius] நமக்குச் சொல்வது என்னவென்றால், கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பற்றியும் ஆரம்பக்காலச் சபையைப் பற்றியும் எண்ணற்ற வரலாறுகள் இருந்தன. இந்தத் துன்புறுத்தலிலிருந்து ஒரு பதிவு மட்டுமே தப்பியது. … அடுத்த தலைமுறை விசுவாசிகள் தங்கள் பெற்றோர் என்ன நம்பினார்கள் என்பதை அறியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ரோம் திட்டமிட்டு கிறிஸ்தவ வரலாற்றை அழித்து வந்தது. … யூசிபியஸ் கூடச் சிறைபிடிக்கப்பட்டார், மேலும் அவரது எழுத்துக்களில் ஏதேனும் தப்பிப்பிழைத்தது ஒரு அற்புதமே ஆகும். அவரது நெருங்கிய நண்பரும் வழிகாட்டியுமான பாம்பிலஸ் [Pamphilus] இந்தக் காலத்தில் இரத்தசாட்சியாக மரித்தார். இந்தக் துன்புறுத்தல் 10 ஆண்டுகள் நீடித்தது, மேலும் இது கான்ஸ்டன்டைனின் [Constantine] வெற்றியினாலும், அவரது மிலன் கட்டளையினாலும் [Edict of Milan] (கி.பி. 313) முடிவுக்கு வந்தது”.

சபையின் சிமிர்னா கட்டம் (The Smyrna Phase of the Church)

வெளிப்படுத்துதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் அதிகாரங்களில் [வெளி. 2; 3], ஆசிய மைனரிலுள்ள ஏழு சபைகளுக்கு ஒரு செய்தியை நமது கர்த்தராகிய இயேசு யோவானுக்குக் கொடுத்தார், இது அப்போஸ்தலர்களின் நாட்கள் முதல் (வெளி. 2:2) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை வரை (வெளி. 3:20) வரையிலான ‘சுவிசேஷ யுகம்’ முழுவதும் கிறிஸ்துவின் சபை கடந்து செல்லும் ஏழு நிலைகளை குறிக்கிறது.

இரண்டாம் காலத்துக்கு உரிய வெளிப்பாடு ‘சிமிர்னா’ சபைக்கு கொடுக்கப்பட்ட செய்தியில் உள்ளது. [வெளி. 1:11] இந்தக் காலம் எருசலேமின் வீழ்ச்சிக்குப் பின் இருந்த காலம், ஆனால் இன்னும் ரோமப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்தது. சிமிர்னாவிற்கான இயேசுவின் செய்தியில் இந்த எச்சரிக்கை அடங்கியிருந்தது: “நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் (மரணத்தின் சிறைச்சாலை, ஏசா. 24:22, 42:7 [தமிழில் ஏசா. 42:6], 49:9) போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்”. (வெளி. 2:10).

“பத்து நாட்கள்” என்பது கி.பி. 303 முதல் கி.பி. 313 வரை டயக்லீஷியன்  மன்னனால் கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட மிகவும் கசப்பான துன்புறுத்தலைக் குறிக்கிறது. தீர்க்கதரிசனத்தில், ஒரு நாள் பெரும்பாலும் ஒரு வருடத்தைக் குறிக்கிறது, எனவே 10 “நாட்கள்” பற்றிய இந்த எச்சரிக்கை 10 ஆண்டுகாலத் துன்புறுத்தலால் நிறைவேற்றப்பட்டது.

தானியேலில் உள்ள 10 நாட்களின் சோதனை, கிறிஸ்தவ சபையின் இந்தச் சோதனையின் படமாகும். டயக்லீஷியன்   கட்டளையிட்டதுபோல அவர்கள் புறஜாதி தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தவில்லை, மேலும் மனசாட்சியின் விளைவுகளை அமைதியான தைரியத்துடன் அனுபவிக்கத் தயாராக இருந்தனர். அவர்கள் கொள்கைக்கான கீழ்ப்படிதலில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர். உலக மக்கள் கூட இந்த உதாரணத்தை மரியாதையுடனும் போற்றுதலுடனும் கவனிக்கிறார்கள். ஆயிரம் வருட ஆட்சியின் போது உலகம் முழுவதும் கிறிஸ்துவுக்காகத் தியாகம் செய்த இந்த உன்னத இரத்தசாட்சிகளின் சாட்சியத்தைப் பாராட்டும்.

புறஜாதி ரோமால் சபையின் துன்புறுத்தல்கள் தானியேலும் அவனது தோழர்களும் கொண்ட இந்த முதல் சம்பவத்தில் சித்தரிக்கப்பட்டது. இராஜ்யத்தின் போது இஸ்ரவேலையும் உலகத்தையும் வழிநடத்தப்போகும்  பண்டைய கால நீதிமான்கள் [அல்லது விசுவாச வீரர்] வகுப்பின் ஒரு பகுதியாக அவர்கள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படும்போது, மனசாட்சிக்காக அவர்கள் எடுத்தத் தாழ்மையான நிலைப்பாடு, மனசாட்சியின் நிமித்தம் தங்கள் உயிரை ஈந்த இயேசுவின் இரத்தசாட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்பதைக் கண்டு அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நாம் எப்பொழுதும் ஒரு தெய்வீக மனசாட்சியைப் பின்பற்றுவோமாக.

மூன்று ஆண்டுகள்

தானி. 1:5-இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று ஆண்டுகள் அவர்களுடைய சிறையிருப்பின் முதல் மூன்று ஆண்டுகள் ஆகும். இவை நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகள் ஆகும், இது அவன் அரியணை ஏறிய ஆண்டிலிருந்து தொடங்குகிறது.

பதவியிலிருந்து விலகும் ராஜாவிற்கான மாற்றத்தின் ஆண்டை கணக்கிடுவதும், மற்றும் அதே ஆண்டை புதிய ராஜாவின் “அரியணை ஏறிய ஆண்டு” என்று கணக்கிடுவதும் பாபிலோனிய வழக்கமாக இருந்தது. புதிய ராஜாவின் அதிகாரப்பூர்வமான முதல் ஆண்டு, அடுத்த புத்தாண்டு தினத்தன்று தொடங்கும். பாபிலோனியர்களைப் பொறுத்தவரை இது வசந்த காலத்தில், அவர்களின் நிசானு மாதத்தின் முதல் நாளில் இருந்தது (இஸ்ரவேலின் பாபிலோனியச் சிறைபிடிப்புக்குப் பிறகு எபிரேய மொழியில் அதே மாதத்திற்கு ‘நிசான்’ என்ற பெயர் வந்தது).

இவ்வாறு தானியேலும் அவனது தோழர்களும் பயிற்சியளிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் (1) நேபுகாத்நேச்சாரின் அரியணை ஏறிய ஆண்டு, (2) நேபுகாத்நேச்சாரின் முதல் ஆண்டு, (3) நேபுகாத்நேச்சாரின் இரண்டாம் ஆண்டு ஆகும். உள்ளடக்கிய கணக்கீட்டின்படி இந்த மூன்று ஆண்டுகாலப் பயிற்சி, நேபுகாத்நேச்சாரின் இரண்டாம் ஆட்சி ஆண்டிலேயே நிறைவடைந்தது. இது தானி. 2:1-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு, அந்த ஆண்டில்தான் தானியேல் ராஜாவுக்கு முன்பாக நின்று அவனது உலோகச் சிலையின் சொப்பனத்தை விளக்கினான் (அதைக் குறித்து, அடுத்த இதழில் மேலும் பார்க்கலாம்).

முடிவுரை

முதலாம் அதிகாரம் மூன்று ஆண்டுகாலப் பயிற்சி நிறைவடைவதோடு முடிகிறது. “ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான்.” (தானி. 1:19, 20). [தானி. 1:18-20]

நாம் நமது போதனையின் போக்கை முடித்து, நமது மனசாட்சியின் சோதனைகளில் தேர்ச்சி பெற்றால், ஒரு நாள் நாம் நமது ராஜாவுக்கு முன்பாக நின்று, அவரது பரலோக அரசவையில் சேவை செய்வோம். மூன்று என்பது மீட்பின் ஒரு சின்னமாகும், இயேசுவும் மூன்று நாட்கள் கல்லறையில் இருந்தார், அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட விலை 30 வெள்ளிக்காசுகள், மேரி அவரது வரவிருக்கும் மரணத்திற்காக 300 பணம் பரிமளதைலத்தால் அபிஷேகம் செய்தாள், மேலும் பெந்தெகொஸ்தே நாளில் 3000 பேர் பேதுருவின் செய்தியை ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவினால் மீட்கப்பட்டனர்.

ஒருவேளை, பரிசுத்தவான்கள் திரைச்சீலைக்கு அப்பால் உள்ள சேவைக்காகப் பயிற்சிக்கும் கீழ்ப்படிதலுக்கும் அழைக்கப்படும் சுவிசேஷ யுகத்தின் மீட்பைக் குறிக்க தானியேலும் அவனது நண்பர்களும் கொண்ட மூன்று ஆண்டுகாலப் பயிற்சி காலம் இருக்கலாம்.

ஒருவேளை சிமிர்னா சபையின் சோதனைகளைச் சகித்த விசுவாசிகளுடன் தொடர்புடைய ஒரு இரண்டாவது படமும் இருக்கலாம். கி.பி. 313-இன் மிலன் கட்டளை சபையின் சுமையைத் நீக்கியபோது, அதன்பிறகு விரைவில் கிறிஸ்தவர்கள் கான்ஸ்டன்டைனால் ரோமப் பேரரசில் பெரும் உயர்வுக்கு உயர்த்தப்பட்டனர்.

கி.பி. 361-363 வரை ஆட்சி செய்த கான்ஸ்டன்டைனின் மருமகனான “மதத்தை விட்டு விலகிய ஜூலியன்” ஆட்சியின் போது புறஜாதித்துவம் ஒரு குறுகிய மறுமலர்ச்சியைக் கண்டது. ஆனால் அதன்பிறகு புறஜாதித்துவம் பேரரசின் மீது தனது பிடியை இழந்தது. ஆவிக்குரிய கட்டுப்பாட்டிற்கான பரலோகத்திலிருந்த போர், கிறிஸ்தவத்தின் படைகளுக்கும் புறஜாதித்துவத்தின் படைகளுக்கும் இடையில் நடந்தது, கிறிஸ்தவம் வெற்றி பெற்றது. இது வெளி. 12:9-இன் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.”.

ஆனால் கர்த்தருடைய ஜனங்களுக்கு இன்னும் மற்றச் சோதனைகள் முன்னால் இருந்தன. இதைப் பற்றித் தானியேல் இரண்டாம் அதிகாரத்தில் அதிகம் காண்போம்.

முதலாம் அதிகாரத்தின் கடைசி வசனம் “கோரேஸ் ராஜாவினுடைய முதலாம் வருஷம்வரைக்கும் தானியேல் இருந்தான்” என்று கூறுகிறது [தானி. 1:21]. உண்மையில், தானியேலைப் பற்றிய கடைசிப் பதிவு கோரேஸின் மூன்றாம் வருடத்தில் உள்ளது (தானி. 10:1). தானி. 1:21-இன் கருத்து என்னவென்றால், தானியேல் பாபிலோனியப் பேரரசின் எஞ்சிய ஆண்டுகளிலும் தொடர்ந்தான், மேலும் அடுத்த இராஜ்யம் அந்தப் பேரரசை கைப்பற்றுவதைக் காணும் வரை வாழ்ந்தான்.

அதுபோலவே சபை கிறிஸ்துவின் வருகையையும், பூமியில் அவரது அதிகாரத்தின் தொடக்கத்தையும் காணும்வரை வாழ்கிறது. கிறிஸ்து ஏற்கெனவே, கண்ணுக்குத் தெரியாமல், ராஜ அதிகாரத்துடன், கோரேஸ்-இன் நிறைவேற்றமாகத் திரும்பி வந்துள்ளார் (ஏசாயா 45:1-ஐ ஒப்பிடுக). தானியேலைப் பற்றிய நமது ஆய்வில் நாம் பின்னர் பார்ப்பது போல, கிறிஸ்து 1874-இல் திரும்பி வந்தார், மேலும் அந்த நேரம் முதல் நாம் சுவிசேஷ யுகத்தின் அறுவடையில் இருக்கிறோம். (“அறுவடைகள்” பற்றிய பின்வரும் கட்டுரையைப் பார்க்கவும்).

திரும்பி வந்துள்ள நமது கர்த்தர் இப்போதும் ஒரு வெற்றி பெறும் ராஜா, இந்த பூமியின் தேசங்கள் மற்றும் அமைப்புகளை நியாயத்தீர்ப்புக்குக் கொண்டுவருகிறார். இதனால்தான் உலகம் இரண்டு உலகப் போர்களைக் கடந்து வந்துள்ளது, மேலும் அர்மகெதோன் யுத்தம் இன்னும் வரவிருக்கிறது. அதன்பிறகு, கிறிஸ்துவின் ஆயிரம் வருட சமாதான ஆட்சி பூமியில் நிறுவப்படும், மேலும் அதன் மூலம் பூமியின் எல்லாத் தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி.12:3).

– சகோ. டேவிட் ரைஸ் – ஃபெய்த்பில்டர்ஸ் ஃபெலோஷிப் [Faithbuilders Fellowship], ஜனவரி 2006-இலிருந்து.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *